"தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல" பாஜகவை சீண்டும் அதிமுகவின் கே.பி.முனுசாமி !
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக -அதிமுக இடையேதான் நேரடி போட்டி உள்ளது என்று அதிமுக பொதுக்குழுவில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியதால் மீண்டும் தமிழக அரசியல் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னை, வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில், இன்று நடைபெற்றது. பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரையாற்றினார். பின்னர் மைக் பிடித்த அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அதிமுக என்பது ஆலமரம். மாண்புமிகு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வளர்த்த இயக்கம். எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக -அதிமுக இடையேதான் நேரடி போட்டி நடைபெறும் என்றும், தேசிய கட்சிகள் எல்லாம் நமக்கு ஒரு பொருட்டே அல்ல என்று பேசினார்.
மேலும், ஜனநாயக அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தான் இப்போது போட்டி நடைபெற்று வருகிறது என்றும் அதிமுக பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி குறிப்பிட்டார். இதனால், அதிமுக - பாஜக கூட்டணியில் சிறிய அளவில் நெருடல் உள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால், மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.