அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளது: ஆளும் கூட்டணிக்குள் தொடரும் அக்கப்போர்

By Jon Jan 04, 2021 11:22 AM GMT
Report

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. முதல்வர் வேட்பாளரை யார் அறிவிப்பது, யார் கூட்டணிக்கு தலைமை வகிப்பது என்பது பற்றி அடிக்கடி இருகட்சி தலைவர்களும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈ.பி.எஸ் தான் முதல்வர் வேட்பாளர் என அதிமுக அறிவித்துவிட்டது. ஆனால் பாஜக அறிவிப்பவர் தான் முதல்வர் வேட்பாளர் என அந்தக் கட்சியினர் கூறி வருகின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாரதிய ஜனதா இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக இடையே கூட்டணி குறித்தும் முதல்வர் வேட்பாளர் குறித்தும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் இந்த இருகட்சிகளுக்கு இடையே கூட்டணி நிலைக்குமா? பாஜக தனித்து போட்டியிட திட்டமிடுகிறதா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விஷயத்தின் கிஞ்சித்தும் மாற்றம் இருக்காது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாரதிய ஜனதா இருக்கிறது, கூட்டணி தொடர்கிறது என கூறினார். கட்சிகள் கூட்டணி என்பது வேறு, கொள்கை வேறு; தேர்தலை சந்திக்கவே கூட்டணி அமைக்கப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவை பொறுத்தவரை எங்கள் நிலைப்பாடு மாறாது. அதிமுக - பாஜக கூட்டணி நீடிப்பதாக முதல்வர், துணை முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஒருமனதாக அறிவித்திருக்கிறோம்.

அதிமுக முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது பற்றி தலைமை முடிவு செய்யும் எனவும் கூறினார்.