மாநில கட்சியே முதல்வர் வேட்பாளரை ஏற்க மறுக்கிறது - எடப்பாடியை சாடிய குஷ்பூ
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையிலே அறிவித்திருந்தனர். அதே சமயம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக ஈ.பி.எஸ் இருப்பார் என்றும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் பாஜக ஈ.பி.எஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்கவில்லை. மாறாக பாஜக அறிவிப்பவரே முதல்வர் வேட்பாளர் என்று தெரிவித்து வந்தது. இதே கருத்தை பல அதிமுக அமைச்சர்களும் தெரிவித்து வந்தனர்.
இதனால் அதிமுக - பாஜக இடையே கடும் சலசலப்பு நிலவி வந்தது.
தற்போதும் அதிமுகவின் இன்னொரு கூட்டணி கட்சியான பாமகவும் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் மௌனம் காத்து வருகிறது.
சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ, “மாநில கட்சியே முதல்வர் வேட்பாளரை ஏற்க மறுக்கிறது, கூடிய விரைவில் பாஜக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.