அதிமுக தெய்வ சக்தி உள்ள கட்சி; அழிக்க நினைத்தால் இது நடக்கும் - எச்சரிக்கும் ஈபிஎஸ்!
இந்தியாவிலேயே அதிக தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக தான் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சிதம்பரம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரியலூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் "தேர்தலுக்குப் பிறகு உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தெரியும்.
எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக தெய்வ சக்தி உள்ள கட்சி. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அதிமுகவை சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் என்ன ஆகும் என்பதை தொண்டர்கள் காட்டுவார்கள்.
பாராட்டவும் செய்வோம்
இந்தியாவிலேயே அதிக தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுகதான். திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பார்க்கவே இல்லை. தேர்தல் காரணமாக தற்போதுதான் தேநீர் கடைக்கு வந்து மக்களை சந்தித்துள்ளார்.
சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி மற்றும் நடைப்பயணம் செய்வதை மட்டுமே முதல்வர் செய்கிறார். மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தால் அதை பாராட்டவும் செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.