கச்சத்தீவை பற்றி பாஜக பேசுவதா? அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி தாக்கு!
அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அத்தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி "அதிமுக கூட்டணிக்கு பலமில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கு பாருங்கள் எவ்வளவு பேர் கூடியிருக்கிறார்கள். பல அரசியல் கட்சிகள் கச்சத்தீவு விவகாரம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
1979-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் திமுக ஆட்சி நடந்தது. அப்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரசும், திமுகவும் தான். 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
அரசியல் ஆதாயம்
பிறகு நேரில் சந்தித்து கச்சத்தீவை மீட்கக் கோரி கோரிக்கை வைத்தார். ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. ஆனால் இப்போதே மத்தியில் ஆட்சி செய்பவர்களும், இங்கிருக்கும் பாஜக தலைவர்களும் கச்சத்தீவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப்பற்றி அவர்கள் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தார்கள். அப்போதெல்லாம் கிடப்பில் போட்டு விட்டார்கள். இன்றைக்கு தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் வாக்குகளை பெற வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.