எங்களின் ராஜமாதாவே – சசிகலாவுக்கு போஸ்டர் வைத்த மற்றொரு அதிமுக நிர்வாகி!
சசிகலாவுக்கு மேலும் ஒரு அதிமுக நிர்வாகி போஸ்டர் அடித்த சம்பவம் தேனியில் நிகழ்ந்துள்ளது. சசிகலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அங்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று உறுதியான நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து அவர், உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடல்நிலை சரியாகி சசிகலா விரைவில் தமிழகம் திரும்பவுள்ளார். இதனால் அவரை வரவேற்கும் விதத்தில் அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் நெல்லை, திருச்சியை தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக தேனியிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதிமுக ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்னராஜா சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், தமிழ் நாட்டை வழிநடத்த வருகைதரும் அதிமுக கழகத்தின் பொதுச்செயலாளர், தியாகத்தின் மறு உருவம் எங்களின் ராஜமாதாவே வருக! வருக! ” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய சுப்ரமணியராஜா, அண்ணாதுரை ஆகிய 2 பேரும் ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மேலும் ஒரு அதிமுக நிர்வாகி சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.