அதிமுகவை மிரட்டுகிறதா திமுக...இல்லை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் அதிமுக தடுகிறதா..
முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை தமிழக அரசு கையில் எடுத்திருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக ஆளுநரை சந்தித்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அமைச்சரவை மீது 97 பக்கம் கொண்ட ஊழல் புகாரை அளித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கையை திமுக அரசு எடுக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டன.
இதனையடுத்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது விஜிலென்ஸ் பார்வை திரும்பியது. ஆட்சி மாற்றத்துக்கு பின், முதல் முறையாக முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வீடு உள்ளிட்ட, 24 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர்.

அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில், தி.மு.க.,வை சேர்ந்த செந்தில்பாலாஜியிடம் தோல்வியடைந்தார். கடந்த, 2016-21ல் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது, வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், ஒளிரும் பட்டை, ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட நிறுவனங்களுடையது மட்டும் பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், அது நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், கரூர் தோரணக்கல்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, இவரது உறவினர்கள் பெயரில், 200 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாக, தற்போதைய மின்சாரதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட, அ.தி.மு.க., செயலாளருமான விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில், கரூர் சின்ன ஆண்டாங்கோவில் ரெயின்போ சாயப்பட்டறை மற்றும் அட்டை பெட்டி நிறுவனம், ஆண்டாங்கோவிலில் உள்ள விஜயபாஸ்கர் தம்பி சேகர் வீடு, கரூர் மில்கேட்டில் உள்ள தறி பட்டறை, அவரது உதவியாளர்கள் கார்த்தி, ரமேஷ் வீடுகள், க.பரமத்தியில் ரெயின்போ கல்குவாரி உட்பட, 22 இடங்களில் சோதனை நடந்தது. சின்ன ஆண்டாங்கோவிலில் விஜயபாஸ்கர் வீடு பூட்டியிருப்பதால், அங்கு ரெய்டு நடக்கவில்லை. அதே சமயம் சென்னையில் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இரு இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின், பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. ஆனால், முதலில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எவ்வித அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார்.

திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தி இருக்கிறது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
“திமுக அரசு பொறுப்பேற்று முழுமையாக 90 நாட்கள் முடிவடையாத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக , எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடுக்கும் நோக்கில் ரெய்டு நடத்தியிருக்கின்றது” என விமர்சித்துள்ளனர்.
மேலும், “திமுக எங்களை அச்சுறுத்த இதை செய்கிறது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளோம். திமுக அரசு இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்ட பூர்வமாக இதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. அதிமுக ஒரு அரசியல் இயக்கம். ஆட்சி பொறுப்பில் இருக்கும் போது தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றும் அரசாக அம்மாவின் அரசு விளங்கியது, இதனை அனைவரும் அறிவர். தமிழக விவசாயிகளை காக்க, காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பு அரசாணையை பெற்று தந்தவர் ஜெயலலிதாதான். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அதிமுக மக்கள் நலன் அரசாக செயல்பட்டது.” என்று செய்தியாளர் சந்திப்பில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
மேலும், “எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் ரெய்டு கண்டனத்திற்குரியது. எந்தவித முகாந்தரமும் இல்லாமல் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது” என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் மேலும் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி,சி.விஜயபாஸ்கர்,சி.வி.சண்முகம்,தங்கமணி,எஸ்.பி வேலுமணி ஆகியோர் பெயர்களும் ஊழல் புகார் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை தொடர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.