அதிமுக அள்ளி கொடுக்கிறது...திமுக கிள்ளி கூட கொடுக்கவில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி,கட்சி நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் வாலாஜாபாத் காஞ்சிபுரம் உத்திரமேருர் ஒன்றியம் பேரூராட்சி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் பதவி தேர்தலில் போட்டியிடுவதற்க்கான விருப்ப மனு பெறப்பட்டது.
நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னிலையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தங்கள் போட்டியிடும் பதவிகளுக்கான விருப்ப மனுக்களை தங்கள் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து ஆர்வத்துடன் வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மூன்று விஷயங்கள் நடைபெறும்,
அத்தியாவசிய பொருட்கள் விலைவாசிகள் உயரும், கட்டுமானப் பொருட்கள் விலை உயரும், விவசாயிகளுக்கான உரம் உள்ளிட்டவைகளின் விலை உயரும், கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை, விளம்பரம் மட்டுமே இந்த ஆட்சியில் முழுமையாக நடைபெற்று வருகிறது.
விளம்பரம் மூலம் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்தால் அது நடக்காது. அதிமுக அரசு வறட்சி வந்தாலும் நிவாரணம் கொடுத்தோம், வெள்ளம் வந்தாலும் நிவாரணம் கொடுத்தோம்,
வறட்சி,வெள்ளம், என்று பார்க்காமல் இயற்கை இடர்பாடுகள் வரும்போதெல்லாம் வாரி வாரி கொடுத்த ஒரே அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம், அதிமுக அள்ளிக் கொடுத்த அரசாங்கம்.
இப்போது திமுக அரசு கிள்ளி கூட கொடுக்கவில்லை என்று கூறினார்.