இனி இந்த 3 பேருக்கு அதிமுகவில் இடமில்லை... - ஜெயக்குமார் பேட்டி...!
இனி ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் 3 பேருக்கும் அதிமுகவில் இடம் கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுக் குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் வழங்கிய உத்தரவையும் உறுதி செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறினர்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது.
ஜெயக்குமார் திட்டவட்டம்
இந்நிலையில், இந்தத் தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இனி ஓ.பி.எஸ்., சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு அதிமுகவில் இடம் கிடையாது. இவர்கள் தவிர மற்றவர்கள் யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.