துரைமுருகன் நாவடக்கத்துடன் பேச வேண்டும் - அதிமுக தலைமை கடும் கண்டனம்

MGR admk dmk minister duraimurugan
By Petchi Avudaiappan Sep 30, 2021 05:23 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

எம்.ஜி.ஆரை துரோகி என குறிப்பிட்டதற்காக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு அதிமுக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துரைமுருகன் எம்.ஜி.ஆர். வைகோ ஆகியோரை நம்பிக்கை துரோகி என்று குறிப்பிட்டிருந்தார். இதனிடையே எம்.ஜி.ஆரை நம்பிக்கை துரோகி என கூறியதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாற்றுக்கு சொந்தமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். ஆனால், வரலாறே ஒரு சிலரைத் தான் தனக்கு சொந்தமாக்கி கொண்டது. அந்த ஒரு சிலரில் ஒருவர் தான், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ’என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்தில் வைத்துக்கொண்டேன்.

அதுதான் எம்.ஜி.ஆர்.’ என்றும் ‘நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்’ என்றும் பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டு, தன்னுடைய திரைப்படங்களின் பாடல்கள் வாயிலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு வித்திட்ட புரட்சித் தலைவரைப் பார்த்து, அண்ணாவின் மறைவிற்கு பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், கருணாநிதியை முதலமைச்சராக்கிய எம்.ஜி.ஆரை பார்த்து நம்பிக்கை துரோகி என்று துரைமுருகன் சொல்வது கண்டனத்துக்கு உரியது.

திமுக கடந்து வந்த பாதையையும் தான் கடந்து வந்த பாதையையும் மறந்துவிட்டு துரைமுருகன் பேசுகிறாரா அல்லது மறைத்துவிட்டு பேசுகிறாரா என்று தெரியவில்லை. நம்பிக்கை துரோகம் என்று துரைமுருகன் கூறியவுடன் நினைவுக்கு வருவது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது என்ற பழமொழிதான். உணவு தந்த வீட்டிற்கு கேடு தரும் செயலை நினையாமல் இருக்க வேண்டும். அவருக்கே கேடு செய்வதுதான் நம்பிக்கை துரோகம்” என்று கண்டித்துள்ளது.

மேலும், திமுக என்ற கட்சி ஆட்சிப் பீடத்தில் அமருவதற்கும் கருணாநிதி முதலமைச்சர் ஆனதற்கும் காரணமான எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதிதான் நம்பிக்கை துரோகி என்றும் காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கினை சத்தம் போடாமல் திரும்பப் பெற்றது, தமிழ் நாட்டு மக்களுக்கு கருணாநிதி செய்த மிகப் பெரிய துரோகம் என்றும் அதிமுக விமர்சித்துள்ளது.

இதேபோல், கச்சத் தீவை தாரை வார்த்தது, தமிழ் நாட்டில் உள்ள மீனவ மக்களுக்கு செய்த துரோகம், இலங்கையில் போர் நின்றுவிட்டது என்று கூறி இலங்கை தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட காரணமாக இருந்தது இலங்கை தமிழர்களுக்கு செய்த துரோகம். நீட் தேர்வுக்கு வித்திட்டது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு செய்த துரோகம். கழகமே குடும்பம் என்றிருந்த திமுகவை குடும்பமே கழகம் என்று மாற்றியது திமுகவினருக்கு செய்த மிகப்பெரிய துரோகம் என்றும் கூறியுள்ளது.

எண்ணற்ற துரோகங்களை செய்துள்ள கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அந்த பணியை துரைமுருகன் எடுத்துகொண்டுள்ளார் என்று கூறியுள்ள அதிமுக, துரோகம் கத்தியைப் போன்றது. மற்றவர்களை குத்தும்போது சுகமாக இருக்கும் நம்மை திரும்பிக் குத்தும்போது கொடூரமாக இருக்கும் என்பதை துரைமுருகன் உணர்ந்து செயல்பட வேண்டும் என அதிமுக எச்சரித்துள்ளது.