அதிமுக வேட்பாளர் திடீர் தற்கொலை
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் (34) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வரும் 19ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 36-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வந்துக் கொண்டிருந்தார்.
ஆனால், இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜானகிராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திமுகவினர் மிரட்டியதால் தான் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டாதாக கூறி அதிமுக மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அதிமுகவினர் காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஜுலியஸ் சீசர் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய விசாரணை செய்யப்படும் என கூறியதை அடுத்து அதிமுகவினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனிடையே அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அதிமுகவினரை திமுகவினர் மிரட்டி வருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.