அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு என்ன காரணம்? முதல் முறை பேசிய எடப்பாடி பழனிசாமி!
கூட்டணி முறிவு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது "பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல,
ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு. 2 கோடி தொண்டர்களின் உணர்வுகள் என்ன என்பதை அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.
உரிமைகளையும் மீட்டெடுப்போம்
கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஓடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலை சந்திக்கின்றனர்?
மாநிலத்தின் உரிமையை காக்க நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும். சில நேரங்களில் தேசிய கூட்டணியில் இருக்கும் போது, தேசியக் கட்சி எடுக்கும் முடிவுகளில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் நாம் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதை நிறைவேற்றுகின்ற கட்டாயம் ஏற்படுகிறது.
இனி அது போன்ற நிலைமை இல்லை. ஏனென்றால் தமிழக மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள்தான் முதலாளிகள் அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வது தான் அதிமுகவின் எண்ணம்.. தமிழக மக்களின் உரிமைகளையும் மீட்டெடுப்போம்" என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.