நகர்புற உள்ளாட்சி தேர்தல்: தொகுதி பங்கீட்டில் அதிமுக - பாஜக இடையே இழுபறி

admk dmk bjp அதிமுக பாஜக urbanlocalbodyelection நகர்புறஉள்ளாட்சிதேர்தல்
By Petchi Avudaiappan Jan 29, 2022 05:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் அதிமுக-பாஜக இடையே இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் வேட்பாளர்களை அறிவிக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதேசமயம் கூட்டணி கட்சிகளும் தங்களுக்கான இடங்களை கேட்டுப் பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. 

அந்த வகையில் சென்னையில் இன்று அதிமுக- பாஜக இடையே இடப்பங்கீடு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்ததாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்.மாளிகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,ஜெயக்குமார்,அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், பாஜக சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை,தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்,தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். 

மதியம் 12.40 மணிக்கு துவங்கிய கூட்டணி பேச்சுவார்த்தை மாலை 4 மணி வரை நடைபெற்ற நிலையில் இக்கூட்டத்தில் மாநகராட்சிகளில் அதிக இடங்களை வழங்க முடியாது என்றும் நகராட்சி பேரூராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களை தர தயார் என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் கொடுக்கும் இடங்களில் எல்லாம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும்,எங்களுக்கு எந்தெந்த இடங்கள் வேண்டும் என அதிமுகவிடம் கேட்டுள்ளோம், அவர்கள் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசிவிட்டு முடிவெடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.