அதிமுக - பாஜக கூட்டணி பேச்சில் இழுபறி.! என்ன நடக்கிறது?

dmk ntk congress
By Jon Feb 17, 2021 06:52 PM GMT
Report

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 40 தொகுதிகளை ஒதுக்குமாறு தமிழக பாஜக அடம் பிடித்து வரும் நிலையில், 20 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என கறார் காட்டி வருகிறதாம் அதிமுக. இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதற்கான பணிகளை அதிமுக மும்முரமாகியுள்ளது. அதன்படி பாஜக மற்றும் பாமகவுக்கு தலா 20, தேமுதிக-வுக்கு பத்துக்கும் கீழ், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 7, புதிய தமிழகம் கட்சிக்கு 2 என தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

மீதமுள்ள 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிமுக-வின் இந்த தொகுதி பங்கீடு முடிவு பாஜக-வை கடும் டென்ஷனாக்கியுள்ளது. இம்முறை பாஜக தமிழக சட்டப்பேரவைக்குள் இரண்டு இலக்க எண்ணில் எம்.எல்.ஏ-க்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள 45 தொகுதிகளையும் ஒதுக்குமாறு ஒரு பட்டியலை அதிமுக-வுக்கு அளித்துள்ளது பாஜக. அதை பார்த்து அதிருப்தி அடைந்த அதிமுக, பாஜக-வின் விருப்ப பட்டியலை நிராகரித்துள்ளது. தாங்கள் பலம் வாய்ந்த தொகுதிகளை தரமுடியாது எனவும், பாஜக-வுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கும் அளவுக்கு தமிழகத்தில் வளரவில்லை என அதிமுக காரணம் கூறியுள்ளது.

மேலும், பாஜக கேட்கும் தொகுதிகளில் சிறுபான்மையினர் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்கு பாஜக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைப்பது குதிரை கொம்பு. இதனால் பாஜக விரும்பும் தொகுதிகளை தரமுடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டது அதிமுக. ஆனால் இதை ஏற்கும் மனநிலையில் பாஜக இல்லை.

அதனால் டெல்லி சென்று தலைவர்களை சந்தித்து தமிழகத்தின் தாங்கள் விரும்பும் தொகுதிகளில் போட்டியிட நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் அதிமுக வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேமுதிக-வும் 40 தொகுதிகளை கேட்டுள்ளது. இதை கேட்டு கடுப்பான அதிமுக, பத்துக்கும் கீழ் தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என கண்டிஷனாக சொல்லிவிட்டதாம். மேலும், சரத்குமார் கட்சி, கருணாஸ் கட்சியை சேர்ந்தவர்களும் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-விடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.