மறைமுகமாக சசிகலாவை ஆதரித்த அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்தவருமான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலிருந்து அதிமுகவில் பயணித்து வரும் மூத்த தலைவர் ஆவார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா ஆதரவாளராக இருந்து வரும் இவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதையும் கூட்டணிக் கட்சியான பாஜகவை பல்வேறு சமயங்களிலும் கடுமையாக விமர்சித்தவர்.
இவர் ஓபிஎஸ் - இபிஎஸ் இரட்டை தலைமையிலான அதிமுகவில் வகித்து வந்தாலும், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு, சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியது, மாநிலங்களவை பதவி கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தற்போதுள்ள தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.
இவர் "தற்போதைய அதிமுக தலைமை வலிமையற்று உள்ளது. வலுப்படுத்த சசிகலா வர வேண்டும்" என அண்மையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் கடந்த வாரம் நடைபெற்றது.
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அன்வர் ராஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட நிலையில் அவர் மன்னிப்பு கோரியதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.
ஆனாலும் தொடர்ந்து கட்சியையும், தலைமையும் விமர்சனம் செய்தபடி இருந்து வரும் அன்வர் ராஜா, அதிமுக செயற்குழுவில் பங்கேற்க கூடாது என முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அழுத்தம் கொடுத்ததின் விளைவாக அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.