அதிமுக பொதுக்குழு வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு வழக்கு, இன்று 2வது நாளாக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு வழக்கு
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாராயணனும், ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் குரு கிருஷ்ணகுமாரும் ஆஜராகி வாதாடினர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயநாராயணன், கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்கு தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது.
விளக்கம் தர உத்தரவு
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கிய போதும் தேர்வு முறையில் மாற்றம் இல்லை. பொதுக்குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்று வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதி பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து விளக்கம் தர வேண்டும் என்று அறிவித்தார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
அதனைத் தொடர்ந்து இன்று நடந்த விசாரணையில் நாளை மாலைக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2 வார கால அவசாகத்தில் வழக்கை தொடரலாம் என்ற நிலையில் 2 நாளில் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஜெயச்சந்திரனால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.