பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மருத்துவமனையில் அனுமதி
உடல்நிலை குறைவு காரணமாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, கடந்த 18 ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற ஜனநாயக கிறிஸ்துவ பேரவை அமைப்பின் ஆலோசகரான, கிறிஸ்துவ மத அருள்தந்தை ஜாா்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவரை கைது செய்ய வேண்டும் என பாஜக, இந்து இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் புகார்கள் எழுப்பினர்.
இதையடுத்து ஜார்ஜ் பொன்னையா மீது சட்ட விரோதமாக கூடுதல், சாதி, மதம் மற்றும் இரு தரப்பினரிடையே விரோதத்தை உருவாக்குதல் என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், இந்து கடவுள்கள், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாகவும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ மத அருள்தந்தை ஜாா்ஜ் பொன்னையாவை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் வைத்து போலீஸார் இன்று கைது செய்தனர்.
இதையடுத்து குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் பாளையங்கோட்டை சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.