சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - சபாநாயகர் அறிவிப்பு
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
அதிமுக புறக்கணிப்பு
கடந்த 17 ஆம் தேதி திங்கட்கிழமை சட்டப்பேரவை கூட்டத் தொடர் 3 ஆம் நாளான இன்று நிறைவு பெற்றது. முதல் நாள் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.
அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் புறக்கணித்தார். இதையடுத்து இரண்டாம் நாளான நேற்று எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்யக்கோரியும், தனி இருக்கை அமைத்து தரக் கோரியும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தொடர் அமளியில் ஈடுபட்டார்.
பின்னர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யபட்டது.மேலும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவை ஒத்திவைப்பு
நிறைவு நாளான இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதி பிரச்சனைகளை தெரிவித்தனர். அதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் அதற்கான நடவடிக்கை குறித்த விளக்கம் அளித்தனர்.
பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றம், புகையிலைக்கு எதிரான மசோதா போன்றவை நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெற உள்ள சாலை மேம்பாட்டு பணிகள் குறித்தும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரம் குறித்தும் அறிவித்தார்.
பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிந்த பிறகு தமிழக சட்டப்பேரவையினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு.