நம்பர் 1 கோல்ஃப் வீராங்கனைக்கு விமான நிலையத்தில் நடந்த மோசமான சம்பவம் - ரசிகர்கள் கோபம்

By Petchi Avudaiappan May 23, 2022 05:56 AM GMT
Report

பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் இந்தியாவின் நம்பர் 1 கோல்ஃப் வீராங்கனை அதீதி அசோக்கிற்கு மோசமான அனுபவம் நிகழ்ந்துள்ளது. 

கடந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டியில்  கோல்ஃப் போட்டியில் பங்கேற்ற அதீதி அசோக் அந்த தொடரின் இறுதி நாள் வரை 3வது இடத்தில் இருந்தார். கடைசியில் நூலிழையில் பதக்கத்தை தவற விட்ட அவர்  தற்போது கோல்ஃப் தொடரில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.

ஆனால் பாரீஸ் விமான நிலையத்தில் வந்திறங்கிய அதீதி அசோக்கின் கோல்ஃப் ஸ்டிக்கள் அடங்கிய பை வரவில்லை. இதுதொடர்பாக விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் புகார் அளிக்க சென்ற அவரிடம் விரைவில் ஹோட்டலுக்கு வந்து சேர்த்துவிடுவதாக பதில் கிடைத்துள்ளது.

ஆனால் இதுவரையும் கோல்ஃப் பை வராததால் சமூக வலைத்தளத்தில் விளக்கம் கேட்டு அதீதி பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆனால் இதற்கு பதில் கிடைக்கவில்லை. அந்த பதிவில் எனக்கு போட்டிகள் இருக்கும் நிலையில் நாளைக்குள் என்னுடைய கோல்ஃப் ஸ்டிக்களை பெற்று தாருங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி கோல்ஃப் வீராங்கனையாக திகழும் அதீதிக்கு அவரது உடைமைகளை பெற்று தாருங்கள் என்றும், இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.