பள்ளி புத்தகங்களில் கருணாநிதி வரலாறு :. திண்டுக்கல் ஐ.லியோனி
பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் லியோனியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே டி.பி.ஐ வளாகத்தில் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக லியோனி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் லியோனியை வரவேற்ற அன்பில் மகேஷ், அவரது இருக்கையில் அமர வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லியோனி, கடந்த 2011ஆண் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன்.
அப்போது கீழே வைத்த பாடப் புத்தகத்தை இப்போது சுமார் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் கையில் எடுத்துள்ளேன். பள்ளி புத்தகங்கள் என்றால் மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படிக்கிறார்கள். இந்த நிலையை மாற்றி மாணவர்கள் விருப்பத்துடன் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் பாடப் புத்தகங்களை மாற்றுவதே எனது நோக்கம் என தெரிவித்தார்.
மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரையிலான பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.