ஆதார் விவரங்களை தனி நபர்களுக்கு வழங்கக்கூடாது: உயர் நீதிமன்றம் கருத்து
ஆதார் விவரங்களை தனிநபர்களுக்கு வழங்கக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு புதுக்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கணேசன் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது,கணேசன் மகனின் ஆதார் விவரங்கள் கிடைக்க பெறாததால் சிறுவனை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மத்திய அரசு தரப்பில், ஆதார் விவரங்கள் தனிநபர் சம்பந்தப்பட்டவை. நீதிமன்றம் உத்தரவிட்டால் விவரங்களை கொடுக்க தயாராக இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.
அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், ஆதார் விவரங்களை தனிநபருக்கு தான் வழங்கக்கூடாது. புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். மேலும் கணேசனின் மனு தொடர்பாக ஆதார் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.