சென்னை அணியில் மிக முக்கிய வீரர் விலகல் - மாற்று வீரர் அறிவிப்பு
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் ஆடம் மில்னே விலகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 33 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இல்லாததே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் சென்னை அணியில் எடுக்கப்பட்ட ஆடம் மில்னேவும் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால் அவரது இடத்தை சரி செய்ய சென்னை அணி திணறியது.
இந்த தொடரில் வெறும் ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய ஆடம் மில்னேதொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடவில்லை. இதுவரை காயம் குணமடையாத நிலையில் அவர் 2022 ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
மில்னேவிற்கு பதிலாக இலங்கையை சேர்ந்த மத்தீஷா பதிரனா என்னும் வீரர் சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தீஷா பதிரனா தற்போது 19வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.