World Cup: கோலியுடன் சச்சின், தோனி, யுவியை இந்திய அணிக்குள் கொண்டு வாருங்கள் - ஆஸி. வீரர் கருத்து!
உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு சச்சின், தோனி, யுவராஜ் ஆகியோர் தங்களுடைய ஆலோசனைகளை வழங்கலாம் என ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி போட்டிகள் முடிவடைய உள்ளது.
கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. மேலும், உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே பல கிரிக்கெட் வீரர்கள், இந்த அணிகள்தான் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்றும் இந்த அணிதான் உலகக் கோப்பையை வெல்லும் என்றெல்லாம் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் "சச்சின், தோனி, யுவராஜ் சிங் போன்றவர்களில் யாராவது தங்களுடைய அனுபவத்தை இந்திய அணிக்கு கொடுத்து சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வெல்ல உதவுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.
ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து
அவர் கூறியதாவது "ஒரு இந்திய வீரராக இந்தியாவில் விளையாடுவது எப்படியிருக்கும் என்பதை நான் அறிய முடியாது. அது எப்போதும் சுவாரஸ்யமானது. ஒருவேளை நான் இந்திய வட்டாரத்தில் இருந்தால் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி போன்றவர்கள் நேரம் கிடைத்தால் இந்திய அணியுடன் இருந்து தங்களுடைய அனுபவத்தை கொடுக்க முடியுமா என்று கேட்பேன்.
அதேபோல 2011 தொடரில் பல பிரச்சினைகளை தாண்டி சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங் போன்றவர் தம்முடைய அனுபவத்தை சொல்லுமாறு கேட்க முயற்சி செய்வேன். மேலும், அந்த உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி இந்த அணியிலும் ஒரு பகுதியாக இருக்கிறார்.
எனவே அது போன்ற வீரர்களின் அனுபவத்தை பயன்படுத்தி சொந்த மண்ணில் அவர்கள் எப்படி கோப்பையை வென்றார்கள் என்பதை கண்டறிய நான் முயற்சிப்பேன்" என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.