நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்!
நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது நண்பர்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சாலையில் காரில் பயணித்துள்ளார். அப்போது, ஈசிஆர் சாலை சூளேரிக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நள்ளிரவு 1 மணியளவில் அவர் பயணித்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், நடிகை யாஷிகா ஆனந்த், மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவாணி என்பவர் இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் காரணமாக நடிகை யாஷிகா ஆனந்தின் மீது ஏற்கனவே அதிவேக பயணம் மற்றும் விபத்தை ஏற்படுத்தி மரணத்தை விளைவித்தல் என இரண்டு பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்திருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
யாஷிகா ஆனந்த் எலும்புமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், சிகிச்சை முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.