'சேரி மொழி’ சர்ச்சை: 'குஷ்பு சொன்னது Olé விளக்கம்' - பதிலடி கொடுத்த நடிகை வினோதினி!

Tamil Cinema Tamil nadu BJP Kushboo Tamil Actress
By Jiyath Nov 23, 2023 11:20 AM GMT
Report

சேரி மொழி சர்ச்சை தொடர்பாக நடிகை குஷ்பு கொடுத்த விளக்கத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை வினோதினி. 

நடிகை குஷ்பு சர்ச்சை

அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு பதிலளித்த நடிகை குஷ்பு "திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள்.

அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேசமுடியாது என்று பதிவிட்டார். அவரின் அந்த பதிவில் 'சேரி மொழி' என பயன்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு சேரி மொழி என முத்திரை குத்துகிறார் குஷ்பு.

இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கடும் எதிர்வினைகள் எழுந்தன. இதனையடுத்து சேரி மொழி என தான் பயன்படுத்தியதற்கு, புதிய விளக்கத்தை குஷ்பு அவரின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் "நான் பயன்படுத்தி மொழி தொடர்பாக கோபமடைந்து வந்த கூட்டத்தை பார்த்தால் எனக்கு காமெடியாக இருக்கிறது.

நடிகை வினோதினி

பதிலடி பெண்களுக்கான பிரச்சினைகளின்போது இந்த கூட்டம் மவுனமாகிவிடுகிறது. படிக்காதவர்களுக்கு நான் விளக்கிவிடுகிறேன். என்னுடைய ட்வீட்டை கிண்டலுடன் பதிவிட்டிருந்தேன். சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள்.

நான் அன்பை பகிர்ந்து கொள்கிறேன் என கிண்டலாக தெரிவித்தேன்" என விளக்கினார். குஷ்புவின் இந்த சம்பந்தமில்லாத பதிலுக்கு பலர் கெட்ட வார்த்தைகளை கூறி அதற்கு வேறு மொழியில் அர்த்தம் கூறி வருகிறார்கள்.இந்நிலையில் திரைப்பட குணச்சித்திர நடிகையான வினோதினியும் குஷ்புவின் அந்த விளக்கத்தை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "குஷ்பு சொன்ன விளக்கம் Olé விளக்கம். இங்குதான் தமிழக மக்கள் கோபப்படாமல் நான் என்ன நினைத்து அந்த வார்த்தையை கூறினேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது Olé என்ற ஸ்பானிஷ் மொழியைத்தான் நான் பயன்படுத்தினேன். அந்த வார்த்தைக்கு ஸ்பானிஷ் மொழியில் தைரியம், ஆச்சரியம், ஒப்புதல் என்றுதான் அர்த்தம். தமிழ் அர்த்தத்துடன் இந்த வார்த்தைக்கு தொடர்புபடுத்த ஒன்றும் இல்லை" என தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.