அறிவியல் படிக்காமல் அறியாமையைப் பகிர்ந்து கொள்கிறார் - சமந்தா குறித்து மருத்துவர் குற்றச்சாட்டு!
உடல்நலன் தொடர்பாக சமந்தா தவறான மருத்துவத் தகவலை சொன்னதாக மருத்துவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமந்தா கருத்து
நடிகை சமந்தா மையோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, சினிமாவில் இருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துள்ளார். இந்நிலையில், தனது நோய் குறித்தும் உடலை குணப்படுத்தும் பயணம் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘டேக் 20’ என்ற பாட்காஸ்டை தொடங்கினார்.
அதில் வரும் ஒரு எபிசோடில், கல்லீரல் நச்சு நீக்குதல் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அல்கேஷூடன் கலந்துரையாடி இருக்கிறார். அப்போது அல்கேஷ், டேண்டலியன் என்கிற தாவரத்தை சாப்பிட்டால் கல்லீரளுக்கு நல்லது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்தை கண்டித்து கல்லீரல் நிபுணர் டாக்டர் சிரியாக் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
மருத்துவர் குற்றச்சாட்டு
அதில், ‘அறிவியல் படிக்காத இரண்டு நபர்கள் தங்கள் அறியாமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆரோக்கிய பயிற்சியாளர் உண்மையான மருத்துவர் இல்லை. கல்லீரலின் செயல்பாடுகள் பற்றி இவர்களுக்குத் தெரியவில்லை’ என்றார்.
மேலும், ’வீடியோவில் இவர்கள் குறிப்பிடும் டேண்டலியன் என்பது காய்வகைகளில் ஒன்று. இதை சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம். இதைக் கொண்டு கல்லீரைச் சுத்தப்படுத்த முடியும் என்பது அபத்தமான விஷயம். அப்படியான எந்த ஆராய்ச்சியும் மனிதர்கள் மீது நடத்தப்படவில்லை.
டேண்டலியனின் மருத்துவ பயன்கள் குறித்து இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. விலங்குகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளை வைத்து நம்மிடம் சில சான்றுகள் இருக்கிறது. அதற்காக, நாம் இதை மனிதர்கள் மீது பயன்படுத்தக் கூடாது.
பிரபலங்கள் எப்படி இதுபோன்ற விஷயம் தெரியாதவர்களை வைத்துக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. இந்தத் தவறான தகவல் மூலம் சமந்தா தனது மூன்று கோடி ரசிகர்களைத் தவறாக வழிநடத்துகிறார்’ என்று கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.