அடித்தது அதிர்ஷ்டம்..அமைச்சராகும் பிரபல நடிகை - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
ஆந்திர மாநிலத்தில் புதிய அமைச்சரவை அமையவுள்ள நிலையில் அதில் நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன், ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்றைய தினம் அமராவதியில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இந்த கூட்டத்தின் இறுதியில் ஏற்கெனவே கூறியபடி 24 அமைச்சர்களிடமிருந்து ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகன் மோகன் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் புதிய அமைச்சரவை குறித்து ஜெகன் மோகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பழைய அமைச்சர்களில் சிலருக்கு வாய்ப்பு வழங்கலாம் என கூறப்படும் நிலையில் பெரும்பாலும் புதியவர்களுக்கு தான் பதவி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நகரி தொகுதியில் ரோஜா சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவருக்கு மக்கள் செல்வாக்கும் அதிகமாக உள்ளது.
ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் முதல் அமைச்சரவையில் ரோஜா இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு துறை தலைவராக ரோஜா நியமிக்கப்பட்டார். ஆனால் எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் உத்தரவால் அந்த பதவி ரோஜாவிடம் இருந்து பறிபோனது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆந்திர சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரோஜாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.