நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ராஷ்மிகா - ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கைப் படத்தில் நடிக்க, நடிகை ராஷ்மிகா மந்தன்னா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தன்னா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.
தெலுங்கு, கன்னடம், தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற அவர் தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். ராஷ்மிகா தான் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில், ஒரு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
யாருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்திலாவது நடிக்க விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு ராஷ்மிகா நடிகை சௌந்தர்யாவின் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார். "நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு, என் அப்பா எப்போதுமே நான் நடிகை சௌந்தர்யாவை ஒத்திருப்பதாக சொல்வார்.
அவர் அடைந்த வளர்ச்சி எனக்குப் பிடித்திருக்கிறது, நான் அவள் வாழ்க்கை வரலாறு செய்ய விரும்புகிறேன், ”என்று ராஷ்மிகா கூறினார். ராஷ்மிகா தற்போது அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.
அந்தப் படத்தை அடுத்து இந்தியில் மிஷன் மஜ்னு என்ற படத்திலும் நடிக்கிறார். அமிதாப் பச்சனுடன் இந்தியில் குட்பை என்ற படத்திலும் ராஷ்மிகா நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.