ஆண்களை அப்படி சொல்வதில்லை,பெண்களை மட்டும் ஏன்..? நடிகை பிரியாமணி வேதனை!
நடிகை பிரியாமணி வயது மற்றும் உருவ கேலிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை பிரியாமணி
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'கண்களால் கைது' செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனைத் தொடர்ந்து 'அது ஒரு கனாக்காலம்' என்ற படத்தில் நடித்தார். ஆனால் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அவர் நடித்த பருத்திவீரன் என்ற படம் ஹிட் அடித்தது.
அந்த படத்தில் பிரியாமணியின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அண்மையில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பதிலடி
இந்நிலையில் பெண்களை வயது மற்றும் உருவத்தைவைத்து கேலி செய்பவர்களுக்கு நடிகை பிரியாமணி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் "40 வயது அடைந்தாலும் ஆண்களை யாரும் அங்கிள் என்று அழைப்பதில்லை. ஆனால் பெண்கள் 40 வயதைக் கடந்துவிட்டால் அவர்களை ஆன்ட்டி என்று கிண்டல் செய்கிறார்கள்.
இந்த வயது மற்றும் உருவ கேலி பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. கேலி செய்பவர்கள் 40,50 வயது காலகட்டத்து நிச்சயம் வரத்தான் போகிறார்கள். ஆரம்பத்தில் அப்படி கேலி செய்வதை பார்த்து கவலைப்பட்டேன். இப்போது அதிலிருந்து மீண்டுவிட்டேன். இதுபோன்ற கேலிக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்பதும் எனக்கு புரிந்தது'' என்றார்.