நடிகை பிரதியுஷா மரண வழக்கு: 24 ஆண்டுக்கு பின் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
பிரபல நடிகை பிரதியுஷாவின் மரண வழக்கில் 24 ஆண்டுகளின் பின்னர் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த வழக்கில் சித்தார்த் ரெட்டி தற்கொலைக்கு தூண்டியதாக குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே ஜாமீனில் உள்ள சித்தார்த், நான்கு வாரங்களில் காவல் நிலையத்தில் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை பிரதியுஷா வழக்கு
`ராயுடு' என்ற தெலுங்குப் திரைப்படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் தான் பிரதியுஷா.
முரளி நடிப்பில் தம்பிராமையா இயக்கத்தில் உருவான `மனுநீதி' படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து, பிரபுவுடன் `சூப்பர் குடும்பம்', விஜயகாந்த்துடன் `தவசி', சத்யராஜுடன் `சவுண்டு பார்ட்டி', ராமராஜனுடன் `பொன்னான நேரம்', பாரதிராஜாவின் `கடல்பூக்கள்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.
ஆனால் யாரும் எதிர்பாராவ வகையில்,தனது 21 வயதிலேயே அவர் மரணமடைந்த செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் மரணத்தை விடவும் அதில் இருந்த மர்மம் தந்த அதிர்ச்சி தான் அதிகம்.

நடிகை பிரதியுஷாவும், சித்தார்த் ரெட்டியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், சித்தார்த் வீட்டில் இவர்களது காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
எனவே 2002 பிப்ரவரி 22 ஆம் திகதி பூச்சிக் கொல்லி மருந்தை இருவரும் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றார்கள். ஆனால் இதில் சித்தார்த் மட்டும் உயிர் பிழைக்க துரதிஷ்ட வசமாக பிரதியுஷா உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து, பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி, இது வெறும் தற்கொலை அல்ல; கூட்டுப் பாலியல் வன்கொடுமை எனவும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இதற்குப் பின்னால் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தச் சம்பவத்தில் பிரதியுஷாவை தற்கொலைக்குத் தூண்டியதாக சித்தார்த் ரெட்டி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ, சித்தார்த் ரெட்டி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
அதனடிப்படையில், கடந்த 2004-ம் ஆண்டில் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையை ஹைதராபாத் முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சித்தார் 2011-ம் ஆண்டு மேல்முறையீடு செய்ய, அவரின் தண்டனையை உயர்நீதிமன்றம் 2 ஆண்டுகளாகக் குறைத்ததுடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.ஆனாலும் தன் தண்டனை காலத்தை குறைக்க கோரி சித்தார்த் மீண்டும் மேல்முறையீடு செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதியுஷாவின் தாய், 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை நாடினார்.14 ஆண்டு விசாரணைக்குப் பிறகு உயர் நீதிமன்றத் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், பிரதியுஷா கழுத்து நெடுக்கப்பட்டதாகவோ, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவோ எந்தவித ஆதாரங்களும் பெறப்படவில்லை.

இது விஷம் அருந்தியதால்,ஏற்பட்ட மரணம் என்பதும் மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக அவரது தாய் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதுடன்,அதே நேரத்தில் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் சித்தார்த் ரெட்டியே குற்றவாளி என உறுதி செய்துள்ளது.
எனவே சித்தார்த் ரெட்டியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, ஜாமீனில் உள்ள சித்தார்த் ரெட்டி இன்னும் நான்கு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகை பிரதியுஷா இறந்து 24 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Pandian Stores 2: மீனா வீட்டில் தஞ்சமடைந்த மயில்... செந்தில் கோபத்தில் எடுக்கும் முடிவு என்ன? Manithan
இராணுவத்தினருக்கு ஓட்டுநர் பயிற்சி : எதிர்த்து நள்ளிரவு முதல் தொடருந்து சாரதிகள் வேலைநிறுத்தம் IBC Tamil