என் போட்டோக்களை வெளியிட்டார்; 2 கோடி கேட்டு மிரட்டினார் - பார்வதி நாயர் பரபரப்பு அறிக்கை
தன் மீது பரப்பப்பட்ட அவதூறுகள் குறித்து நடிகர் பார்வதி நாயர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பார்வதி நாயர்
தமிழில் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், கோட் ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 2022ம் ஆண்டு இவரது வீட்டில் ரூ.18 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது. இதில் அவரது வீட்டில் வேலைபார்த்த சுபாஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சுபாஷ் குற்றச்சாட்டு
ஆனால் இந்த குற்றச்சாட்டை ஏற்க மறுத்த சுபாஷ், பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன் நான் நெருக்கமாக இருந்ததாகவும், அதை பார்த்து விட்டதால் தான் என் மீது பொய் புகார் அளித்துள்ளார். மேலும் என்னை அடித்து துன்புறுத்தினார் என்றும் காரி கூட உமிழ்வார் எனவும் புகார் அளித்தார். இதன் பேரில் பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதை முற்றிலுமாக மறுத்த பார்வதி நாயர், சுபாஷ் என்னை பற்றி அவதூறு பரப்பி என் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார் என புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வீட்டில் நடந்த திருட்டு
இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த அறிக்கையில் "கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் எனது வீட்டில் திருட்டு நடந்தது. அன்று முதல் தொடர்ந்து பல தொல்லைகளை எதிர்கொண்டு வருகிறேன். இந்த காலக்கட்டத்தில் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானேன். அன்று முதல் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்த்தேன்.
ஆனால் தற்போது போலியான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் எனது வீட்டில் ரூ.18 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது. இதுபற்றி போலீசில் புகார் அளித்தேன். போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஒருவர் தான் சுபாஷ்.
இவர் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக உதவியாளர். அவர் என்னிடம் வந்து போட்டோ ஷூட்டுக்கு உதவி செய்தார். அதேபோல் வீட்டு வேலைகளுக்கு உதவினார். அவரது பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டவுடன் பெயரை அகற்றும்படி என்னை மிரட்டினார். நான் மறுத்துவிட்டேன். அவர் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதில் புகார் அளித்தார்.
ஜாதி பாகுபாடு
என்னுடைய போட்டோக்களை எனது அனுமதியின்றி வெளியிட்டார். இதுபற்றி இன்னொரு புகார் அளித்தேன். அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் என்னை பற்றி சுபாஷ் தரப்பில் பரப்பப்படும் செய்திகளை வெளியிட நீதிமன்றத்தில் இடைக்கால தடையும் பெற்றேன்.
இதற்கிடையே தான் சுபாஷ் நீதிமன்ற உத்தரவை மீறி என் மீது அவதூறு பரப்பினார். 2023 செப்டம்பரில் எங்கள் இருவருக்கும் நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அவர் சார்பில் ரூ.10 லட்சம் கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. பணத்தை கொடுக்காவிட்டால் சிவில் மற்றுமு் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மிரட்டினார்.
அதுமட்டுமின்றி ஜாதி பாகுபாடு காட்டியதாக புகார் அளிப்பதாக கூறினார். ஆனால் உண்மையில் சுபாஷின் ஜாதி என்ன என்பது வக்கீல் நோட்டீஸ் வரும்வரை எனக்கு தெரியாது. அதன்பிறகு ரூ.1 கோடி கேட்டு சுபாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் அந்த ஆண்டு முழுவதும் மிரட்டினர். பணம் கொடுக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
2 கோடி கேட்டு மிரட்டல்
நான் தவறு எதுவும் செய்யாததால் அவருக்கு எந்த பணமும் கொடுக்க விரும்பவில்லை. கடந்த ஜனவரி மாதம் நான் நடிக்கும் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அந்த வேளையில் சுபாஷ் மற்றும் அவரது தரப்பில் என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டில் என் மீது வழக்குப்பதிவு செய்ய அவர்களுக்கு சாதகமான உத்தரவு கிடைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதமின்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து என்னிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியும், வழக்கை வாபஸ் பெறவும் சுபாஷ் மிரட்டினார். நான் அதனை மறுத்துவிட்டேன். இதையடுத்து எங்கள் இருதரப்பையும் பேசி சமாதானம் செய்யும்படி நீதிமன்றம் கூறியது. ஆனால் சுபாஷ் தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கிடையேதான் செப்டம்பரில் எனது படம் ரிலீசானது. இந்த வேளையில் என் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதும் பணம் கேட்டு சுபாஷ் என்னை மிரட்டினார்.
புகழுக்கு களங்கம்
கடந்த 28.09.2024 ஆம் தேதி என்னை பற்றி யூடியூப் சேனல்களில் சுபாஷ் தவறான தகவல்களை பரப்பி இண்டர்வியூ கொடுத்துள்ளார். இது எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. மேலும் இதற்கு முன்பு அவர் என்னிடம் பேசியபோது கொலை மிரட்டலும் விடுத்து இருந்தார்.
என் பெற்றோர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் பட வாய்ப்புக்காக சென்னையில் தனியாக வசித்து வரும் எனக்கு சுபாஷ் இப்படியான பல தொல்லைகளை கொடுத்து வருகிறார். பணம் பறிக்கும் நோக்கில் மிரட்டி வருகிறார். இது என மனம் மற்றும் உடலை பாதிக்கிறது. மேலும் எனது வாழ்க்கை, எதிர்காலம், புகழ் உள்ளிட்டவற்றுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
Standing firm in the face of adversity. Truth will prevail.
— Parvati (@paro_nair) October 1, 2024
Thank you for your unwavering support. ? pic.twitter.com/P8rRFpCxTy
தவறு எதுவும் செய்யாமலேயே நான் தொல்லையை எதிர்கொண்டு வருத்தத்துக்கு ஆளாகி உள்ளேன். இதனால் பொதுமக்கள் உண்மை என்ன என்பதை புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளையில் நான் எனது செயல்பாட்டின் மீது உறுதியான நம்பிக்கையுடன் செயல்பட உள்ளேன். உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த வேளையில் எனக்கு உதவியாக இருந்த குடும்பம், நணபர்கள், ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து வருகிறேன். நீதி கட்டாயம் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது'' என தெரிவித்துள்ளார்.