தனுஷ் மீது நடிகை நிக்கி கல்ராணி பரபரப்பு புகார் - நடந்தது என்ன?
நடிகை நிக்கி கல்ராணி தனுஷ் மீது பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார் திருடுபோன பொருட்களை மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
முன்னணி நடிகையாக இருப்பவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சென்னையில் வசித்து வரும் இவர், அண்ணாசாலை காவல் நிலையத்தில் திடீரென்று சென்று ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், தனது வீட்டில் பணிபுரிந்த தனுஷ் என்ற இளைஞர், தனக்கு சொந்தமான ஆடைகளையும், விலை உயர்ந்த கேமராவையும் திருடிச் சென்று விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். நடிகை நிக்கி கல்ராணி அளித்த புகாரின் பேரில் இளைஞர் தனுஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தார்கள்.
இதனையடுத்து, அவர் திருப்பூரில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு சென்று இளைஞர் தனுஷை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் இருந்த நடிகை நிக்கி கல்ராணியின் ஆடை மற்றும் கேமராவை பறிமுதல் செய்ததோடு, விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.
திருடுபோன தனது விலை உயர்ந்த கேமரா மற்றும் ஆடைகள் கிடைத்துவிட்டதால் நடிகை நிக்கி கல்ராணி, தனுஷ் மீது மேற்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க, போலீசிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.