சாதியை கூறி இழிவு! நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு!
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தும், அழகி போட்டிகளில் பங்கெடுத்தும் மக்களால் அறியப்பட்டவர் நடிகை மீரா மிதுன்.
சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியதன் பேரில், மீரா மிதுன் மீது காவல் நிலையங்களில் இதுவரை பல வழக்குகள் பதியப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் சில தினங்களுக்கு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகளை குறித்து கொச்சையாகப் பேசியும், அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தார்.
மேலும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகின்றனர் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. மீரா மிதுனின் இப்பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில் புரட்சி பாரதம் கட்சியினர் சார்பில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை, திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த புகாரை தொடர்ந்து மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.