அசுரன் பட நடிகை காணவில்லை? அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக இயக்குனர் புகார் - அதிர்ச்சியில் திரையுலகம்
மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து என இயக்குநர் சணல் குமார் சசிதரன் சமூகவலைதளங்களில் புகார் அளித்துள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து உள்ளது என இயக்குநர் சணல் குமார் சசிதரன் சமூகவலைதளங்களில் குறிப்பிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது, அவரை சிலர் காவலில் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு நான்கு நாட்களாகிறது. ஆனால் மஞ்சு வாரியரோ, அவருடன் சம்பந்தப்பட்ட வேறு யாரோ இதுவரை பதிலளிக்கவில்லை.
மஞ்சு வாரியரின் மௌனம் என் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. மலையாளத் திரையுலகில் பாலின சமத்துவத்திற்காகச் செயல்படும் அமைப்பான டபிள்யூ.சி.சி-க்கு நேற்று மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் இவ்விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர்.
மிகத் தீவிரமான இந்த பிரச்சனையை பலரும் நகைச்சுவையாகப் பார்க்கின்றனர். கேரளாவில் உள்ள முக்கிய ஊடகங்கள் இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாதது போல் நடிக்க முயல்வது அச்சமாக உள்ளது.
நான் எழுப்பியுள்ள பிரச்சினை தேசிய அளவில் புகழ் பெற்ற ஒரு திரைப்பட நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் பற்றியது என்பதால், தேசிய ஊடகங்கள் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இயக்குநரின் இந்த பதிவு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.