சந்நியாசியாக மாறிய தமிழ் பட நடிகை - கும்பமேளாவில் எடுத்த முடிவு
நடிகை மம்தா குல்கர்னி சந்நியாசியாக மாறியுள்ளார்.
மம்தா குல்கர்னி
மும்பையில் பிறந்த மம்தா குல்கர்னி(52), எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய 'நண்பர்கள்' படத்தின் மூலம் சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார்.
இதன் பிறகு பாலிவுட்டிற்கு சென்ற இவர், அங்கு பல்வேறு படங்களில் நடித்து 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
சந்நியாசம்
2003 ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய இவர், தென்னாப்பிரிக்காவிற்கு சென்றார். அதன் பிறகு மஹாராஷ்டிராவில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைபொருள் பறிமுதல் வழக்கில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு உத்திரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்ட இவர், தான் ஒரு சந்நியாசியாக மாறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக 2012 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச பிரயாக்ராஜின் கும்பமேளாவிற்கு வந்திருந்த இவர் அதன் பிறகு காவி உடை அணிந்து ஆன்மீகத்தில் ஈடுபட தொடங்கினார்.
இந்நிலையில் நேற்று(24.01.2025) மகா கும்பமேளாவின் செக்டர் 16-ல் உள்ள கின்னர் அகாடாவிற்கு வந்த இவர் தலைவரான ஆச்சார்யா லஷ்மி நாராயண் திரிபாதியிடம் முழுத்துறவறம் பூணத் தயாராக உள்ளதாகவும், மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும்படியும், தெரிவித்தார். அதன் பின்னர் இவருக்கு ஷியாமாய் மம்தாணந்த் கிரி என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.
இந்துமதப் பிரச்சாரம்
துறவறம் மேற்கொண்ட முதல் பாலிவுட்டின் நடிகையாக மம்தா உள்ளார். துறவறத்திற்கு பின் கின்னர் அகாடாவின் மத்துரா முகாமில் தங்கி இந்துமதத்தை வளர்க்கப் பிரச்சாரம் செய்ய உள்ளார் மம்தா குல்கர்னி.
இது குறித்து பேசிய, "நான் கடந்த 23 வருடங்களாக துறவறத்தில்தான் உள்ளேன். காளி மாதா கட்டளையிட்டபடி எனது புதிய குருவாக கின்னர் அகாடாவின் தலைவர் லஷ்மி நாராயண் திரிபாதியை ஏற்றுள்ளேன். முழுத்துறவறம் பூண்டதால் மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.