ரூ.200 கோடி மோசடி வழக்கு - பிரபல தமிழ் பட நடிகை கைது
தொழில் அதிபரின் மனைவியிடம் இருந்து ரூ. 200 கோடி ஏமாற்றிய வழக்கில் நடிகை லீனா மரியா பாலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகை லீனா மரியா பால் தமிழில் கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் நடித்துள்ளார். அதுபோல மலையாளத்தில் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா, இந்தியில் மெட்ராஸ் கஃபே உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
லீனா தற்போது கொச்சியில் ஒரு பியூட்டி பார்லரை நடத்தி வருகிறார். இவரை டெல்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த லீனா தான் பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலி ஆவார்.
அதாவது இரட்டை இலை சின்னம் வாங்கித் தருவதாக கூறி தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகருக்கு ஆதரவாக செயல்பட்டு தொழில் அதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதியிடம் ரூ. 200 கோடி லீனா ஏமாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக அதிதி சிங் போலீசில் அளித்த புகார் மனுவில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் என்னை ஒருவர் தொடர்பு கொண்டார். சட்ட அமைச்சரவையில் தன்னை மூத்த அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்ட அவர், அப்பொழுது சிறையில் இருந்த என் கணவருக்கு ஜாமீன் வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக என்னிடம் பணம் கேட்டார் என்று தெரிவித்துள்ளார். அதிதியின் இந்த புகாரின்பேரில் சுகேஷ் சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடந்தபோது சுகேஷ் டெல்லியில் இருக்கும் ரோஹினி சிறையில் இருந்தார். சிறையில் இருந்து கொண்டே அவர் பிறரை ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த லீனா மரியா பால், சுகேஷ் சந்திரசேகரின் உதவியாளர்களான கம்லேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்லேஷ் கோத்தாரி மூலம் தான் சுகேஷும், லீனாவும் சென்னையில் சொகுசு பங்களா வாங்கியிருக்கிறார்கள். இங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 20 கார்களும் பல்வேறு விலை மதிப்பில்லாத பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்கனவே சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.18 கோடி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட போதும் லீனா, சுகேஷுடன் இணைந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.