அந்தமாதிரி ரோல் என்று கதை சொல்கிறார்கள்; எனக்கு ஆர்வம் இல்லை - நடிகை லைலா பளீச்!
நடிகை லைலா சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் குறித்து பேசியுள்ளார்.
நடிகை லைலா
கள்ளழகர் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை லைலா. தொடர்ந்து ரோஜாவானம், முதல்வன், தீனா, நந்தா, பிதாமகன், பரமசிவன் உள்ளிட பல படங்களில் நடித்தார்.
பிதாமகன் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக லைலா நடித்திருப்பார். அதில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார்.
இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு 2022ம் ஆண்டு 'வதந்தி' என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் காம்பேக் கொடுத்துள்ள லைலா இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத 'தளபதி௬௮' படத்தில் நடிக்கவுள்ளார்.
பேட்டி
அண்மையில் நேர்காணல் ஒன்றில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் குறித்து பேசிய லைலா "நான் எடுத்தது ஒரு பெரிய இடைவெளி. குழந்தைகளை வளர்ப்பதற்காக ஒரு இடைவெளி எடுக்கப்பட்டது.
இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அதனால் தொடர்ந்து நடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு வந்த பல கதைகளும், கதாபாத்திரங்களும் எனக்கு ஒத்து வரவில்லை. சிலர் கதை சொல்ல வரும்போது அம்மா வேடம் என்று பேச ஆரம்பித்து விடுவார்கள். அக்கா-தங்கை வேடம் என்று சிலர் சொல்வார்கள்.
இரண்டாவது இன்னிங்ஸ் வலுவான கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் பல டிவி சேனல்களில் நடிக்க அழைப்பு வந்தது. எனக்கு சீரியல்களில் அதிக ஆர்வம் இருந்ததில்லை.
மிக முக்கியமான ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நாயகனும், நாயகியும் ஒருவரையொருவர் காதலிக்கும் காலம் போய்விட்டது. அதில் மகிழ்ச்சி. நல்ல கதைகள் குவிந்து கொண்டே இருக்கின்றன" என்று லைலா பேசியுள்ளார்.