பாஜக ஆதரவு கூட்டம்: திமுகவின் வெற்றி குறித்து பேசிய நடிகை கஸ்தூரி - நழுவிய அர்ஜுன் சம்பத்!
இந்து மக்கள் கட்சியின் பிரச்சார கூட்டத்தில், திமுக கூட்டணி வெற்றி பெறும் என நடிகை கஸ்தூரி பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
நடிகை கஸ்தூரி பேச்சு
கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இறுதி வரை வரவில்லை. பின்னர் கூட்டம் முடிந்த பின்னர் சுமார் 10 மணியளவில் நடிகை கஸ்தூரி வந்தார். பின்னர் அர்ஜுன் சம்பத்துடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அர்ஜுன் சம்பத் அதிர்ச்சி
அப்போது பேசிய கஸ்தூரி "திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காரணம் திமுக வலிமையாக இருக்கிறது. திமுக வலிமையாக இருப்பதை விட முக்கியமான காரணம் திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை.
திமுகவை தோற்கடிக்கும் தேர்தலாக இருக்காது. திமுகவிற்கு அடுத்து யார் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்' என்றார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேலும், கஸ்தூரி பேசுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அர்ஜுன் சம்பத் எதுவும் சொல்லாமல் கூட்டத்திலிருந்து நழுவிச் சென்றார்.