நடிகை கங்கனா ரனாவத்துக்கு பத்மஸ்ரீ விருது - ரசிகர்கள் வாழ்த்து
திரைத்துறையில் சிறந்த சாதனை செய்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நாயகியாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரனாவத்.
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் இவரின் படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று சர்ச்சைக்குரிய கதைக்களங்களை தைரியமான எடுத்து நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.
சமீபத்தில் வெளியான தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதற்கிடையே தங்களது துறைகளில் சாதனை படைத்து வருபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 202-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது 119 பேருக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் திரைத்துறையில் சாதனை படைத்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் இந்த விருதை கங்கனாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.
பத்மஸ்ரீ விருதுபெற்ற கங்கனாவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.