என் இன்ஸ்டாவ சீனாக்காரங்க ஹேக் செஞ்சிட்டாங்க - கதறும் கங்கனா ரனாவத்
கங்கனா ரணாவத்தை திரைப்பட நாயகி என்று சொல்வதைக் காட்டிலும் சர்ச்சைகளின் நாயகி என்று சொல்வதே சாலச் சிறந்தது. அந்தளவிற்கு தனது பிற்போக்குத்தனமான கருத்துகளால் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொண்டார்.
தொடர்ந்து போலிச் செய்திகளையும் அவதூறுகளையும் பரப்பி வந்த அவரின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அங்கே சென்றும் அதே வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். இச்சூழலில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சீனாவிலிருந்து யாரோ ஒருவர் ஹேக் செய்ய முயற்சிப்பதாக கங்கனா பகீர் பதிவை போட்டுள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், “நேற்று இரவு என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை சீனாவிலிருந்து யாரோ ஒருவர் ஹேக் செய்ய முயற்சிப்பதாக இன்ஸ்டகிராமிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்தது. இன்று காலை தாலிபான்கள் குறித்து நான் போட்ட பதிவுகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன.
என்னுடைய கணக்கும் செயலிழந்துள்ளது. இன்ஸ்டாகிராம் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட பிறகே என்னால் தற்போது அதற்குள் நுழைய முடிகிறது. ஆனால் பதிவு எழுத முயலும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் தானாவே லாக்அவுட் ஆகி வெளியே வந்துவிடுகிறது. என்னுடைய போனில் தான் பிரச்சினையோ என்று நினைத்திருந்தேன்.

என்னுடைய சகோதரி போனில் என்னுடைய இன்ஸ்டாவை ஓபன் செய்து பார்த்தேன். அதிலும் இதேபோன்றதொரு பிரச்சினையைச் சந்தித்தேன். இது ஒரு மிகப்பெரிய சர்வதேச சதியாக இருக்கலாம். என்னால் நம்பவே முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.