7வது படிக்கும் போதே கூப்பிட்டாங்க; அதை நினைத்தால் நிம்மதி போய்விடும் - ஹனி ரோஸ்
இதற்கு முன்னர் எனக்கு காதலர் இருந்தார், இப்போது இல்லை என ஹனி ரோஸ் தெரிவித்துள்ளார்.
ஹனி ரோஸ்
தனது 14 வயதில் பாய் ஃபிரெண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார் நடிகை ஹனி ரோஸ். பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ள இவர், முதல் கனவே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
தொடர்ந்து, சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ரேச்சல் என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.
திறப்பு விழா நிகழ்ச்சி
இந்நிலையில் இந்நிலையில், மலையாள நடிகர் சங்கத்தின் யூடியூப் சேனலுக்கு ஹனி ரோஸ் பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், நான் முதல் படம் நடித்த காலத்திலிருந்தே திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன்.
ஆனால் ஆன்லைன் மீடியாக்களின் வரவு காரணமாக கொரானா காலத்திற்கு பின்னர்தான் நான் செல்லும் நிகழ்ச்சிகளை மக்கள் கவனிக்கிறார்கள். கூட்டம் கூடுகிறது. ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் துணிக்கடை, நகைக்கடை திறப்பு விழாவிற்கு மட்டும்தான் சினிமா பிரபலங்களை அழைப்பார்கள்.
ஆனால் கேரளாவில் மெடிக்கல் ஸ்டோர் உட்பட அனைத்து வித நிறுவன திறப்பு விழாவிற்கும் அழைப்பார்கள். ஒருமுறை என்னை பெட்ரோல் பங்க் திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார்கள். பெட்ரோல் பங்க் திறப்புவிழாவுக்கு ஏன் என்னை அழைக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.
காதலர் இப்போது இல்லை
சமூக ஊடகங்களில் வரும் எதிர்மறையான கருத்துகள் என்னை காயப்படுத்துவதில்லை. அதுபற்றி நினைத்துக் கொண்டே இருந்தால் நிம்மதி போய்விடும். அதனால் அதைக் கண்டுகொள்வதில்லை.
என் அழகு, திருமணம் பற்றியெல்லாம் கேட்கிறார்கள். நான் நல்ல எண்ணத்துடன் இருக்கிறேன். அழகு என்பது நல்ல மனதின் வெளிப்பாடு. எனக்கு முன்னர் காதலர் இருந்தார். இப்போது இல்லை. எனக்கு பொருத்தமான நபர் கிடைக்கும் போது எனது திருமணம் நடக்கும்.
ஒருவரைத் தெரிந்து கொண்டு அவரிடம் சிறிது நேரம் பேசினாலே உள்ளுக்குள் ஒரு நடுக்கத்தை உணர வேண்டும். அப்படி இதுவரை யாரிடம் ஏற்படவில்லை. அந்த சரியான நபரை இன்னும் பார்க்கவில்லை. அவரை என் குடும்பத்தினர் பார்த்தாலும் நல்லதுதான்.
போலீஸாக நடிக்க ஆசை
நைட் ஷோ பார்க்கும் பழக்கம் இருப்பதால், காலையில் தூங்கி எழுவதற்கு 10.30 மணி ஆகி விடும். அதன் பிறகு ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபடுவேன். பள்ளி படிக்கும் காலத்திலே நாடகத்தில் நடித்திருக்கிறேன். அதன் பிறகுதான் நடிப்பின்மீது ஆர்வம் ஏற்பட்டது.
நான் 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் ஊரான தொடுபுழாவில் 'மூலமற்றம்' என்ற படத்தின் சினிமா படபிடிப்பு நடந்தது. அதைப் பார்க்கச் சென்ற போது, படத்தின் கன்ட்ரோலர் பொறுப்பில் இருந்த ஒருவர் என்னிடம், "நீ பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறாய். சினிமாவில் நடிக்க வர்றியா?" என்று கேட்டார்.
அதன்பிறகு 10 ஆம் வகுப்பு படித்தபோது முதல் சினிமாவில் நடித்தேன். போலீஸ் ஆபீசராக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆக்ஷன் சினிமாவிலும் நடிக்க விருப்பம் உள்ளது" என தெரிவித்துள்ளார்.