படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்; அடித்து இறக்கி விட்ட நடிகை கைது - வைரல் Video!
பேருந்தில் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை, சினிமா நடிகை ஒருவர் அடித்து கீழே இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படிக்கட்டில் பயணம்
சென்னை போரூரிலிருந்து குன்றத்தூரு நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். அதற்கும் மேலாக பேருந்தின் கூரை மீது ஏறியும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
இதனை, துப்பறிவாளன், இரும்புத்திரை, அண்ணாத்த, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகை ரஞ்சனா நாச்சியார் செல்போனில் படம்பிடித்த படியே காரில் வந்துள்ளார்.
பின்னர் திடீரென பேருந்தை வழிமறித்து நிறுத்திய அவர், பேருந்து ஓட்டுநரை கடுமையாக திட்டினார். அதற்கு ஓட்டுநர் "அவர்கள் சொல்பேச்சு கேட்க மறுக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். உடனே ஆவேசமாக பேருந்தின் படிக்கட்டுக்கு சென்ற நடிகை, அங்கு படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த மாணவர்களை "ஏன்டா அறிவில்லையா" என்று திட்டி கீழே இறக்கி விட்டார்.
இறக்கி விட்ட பெண்
மேலும், இறங்க மறுத்த சில மாணவர்களை கன்னத்தில் அறைந்தும், தலையில் அடித்தும் வலுக்கட்டாயமாக சட்டையை பிடித்து இழுத்து இறக்கி விட்டார். பின்னர் பேருந்தின் நடத்துநரிடம் "அறிவு இல்லையா? உனக்கும் பிள்ளை குட்டி இருக்காங்க தானே, மாணவர்களிடம் சொல்லக்கூடாதா, என்ன கவர்மெண்ட் பஸ் ஓட்டுறீங்க? என்று ஓட்டுநரை கடுமையாக திட்டித் தீர்த்தார் நடிகை ரஞ்சனா நாச்சியார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனை பார்த்த சிலர் அந்த நடிகையை பாராட்டி வந்தனர். ஆனால் சிலர் மாணவர்களை அடிக்க யார் அந்த பெண்ணுக்கு உரிமை கொடுத்தது என்றும் சட்டத்தை கையில் எடுத்த ரஞ்சனா நாச்சியாரை கைது செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று 03/11/2023 - வெள்ளிக்கிழமை சென்னையில் ஒரு பெண்
— நரசிம்மன்???️?? follow back. (@Narasim18037507) November 3, 2023
சிங்கம் #ranjananachiyar .. pic.twitter.com/lFkr4K4noT