கார் விபத்தில் உயிரிழந்த பிரபல தெலுங்கு நடிகை - என்ன நடந்தது?

actressgayathri Telegucinema RIPGayathri காயத்ரிமரணம் நடிகைகாயத்ரி சாலைவிபத்து
By Petchi Avudaiappan Mar 20, 2022 10:33 PM GMT
Report

கார் விபத்தில் தெலுங்கு திரையுலகில் துணை நடிகையாக நடித்து வந்த காயத்ரி என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் கடந்த மார்ச் 18 ஆம் தேதி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் பலரும் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அந்த வகையில் தெலுங்கில்  சில வெப்சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த காயத்ரி என்ற துணை நடிகை தனது நண்பரும், தொழிலதிபருமான 25 வயதான ரோகித் என்பவருடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

ஹைதராபாத்தில் நடந்த இந்நிகழ்வில் வந்திருந்த துணை நடிகை காயத்ரியும், அவரது நண்பர் உட்பட விருந்தினர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் காரில் இருவரும் வீட்டுக்கு கிளம்ப காரை ரோகித் ஓட்டியுள்ளார். கார் கச்சிபௌலி அருகே ஹெச்.எம்.டி மலைப்பகுதியில் வந்தபோது ரோகித் காரை அதிவேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளார் .

அப்போது எல்லா மருத்துவமனை அருகே தோட்டக்கார பெண் 38 வயதான மகேஸ்வரி என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் ஏறி மகேஸ்வரி மீது பயங்கரமாக மோதிய வேகத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துணை நடிகை காயத்ரி, தோட்டக்கார பெண் மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ரோகித் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரோகித் குடிபோதையில் இருந்தாரா என்பதை கண்டறிய இரத்தத்தில் ஆல்கஹால் செறிவு பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். விபத்தில் துணை நடிகை உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.