அஜித் வேணும்னே அப்படி பண்ணாரு; அதை அப்படியே சொன்னாரு - நடிகை சைத்ரா வெளிப்படை!
வலிமை படத்தில் நடிக்கும்போது நடிகர் அஜித்துடனான அனுபவம் குறித்து நடிகை சைத்ரா ரெட்டி பேசியுள்ளார்
சைத்ரா ரெட்டி
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சைத்ரா ரெட்டி. தொடர்ந்து யாரடி நீ மோஹினி, கயல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் அறிமுகமானார் சைத்ரா ரெட்டி. இந்நிலையில் வலிமை படத்தில் நடிக்கும்போது நடிகர் அஜித்துடனான அனுபவம் குறித்து அவர் பேசியுள்ளார். சைத்ரா பேசியதாவது "அஜித் சாரை முதல் முறையாக பார்த்தபோது நான் ஹாய் சார் சொன்னவுடன் அவரும் ஹாய் சொன்னார். என்னை ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டேன்.
உடனே, முதல் முறை நாங்கள் எங்கே சந்தித்தோமோ, அந்த இடம், நேரம் மாறாமல் அப்படியே கூறினார். எனக்கு வியப்பாக போய்விட்டது. நான் படப்பிடிப்பில் சில காட்சிகளில் தவறு செய்துவிட்டேன். அதனால் நான் மிகவும் சோகமாக உணர்ந்தேன்.
அன்பாக பார்த்துக்கொள்வார்
ஆனால், அஜித் சார் என்னிடம் வந்து படப்பிடிப்பு தளத்தில் தவறுகள் நிகழ்வதெல்லாம் சாதாரணம். இதற்காக நீங்கள் கஷ்டப்பட வேண்டியது கிடையாது என்று கூறினார். அதன் பிறகு, வேண்டுமென்றே சில காட்சிகளில் தவறாக நடித்தார்.
மேலும், அஜித் சார் என்னிடம் வந்து "பாருங்கள் நான் எத்தனை படங்களில் நடித்திருக்கிறேன்.எனக்கு சில நேரங்களில் தவறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது" என்று கூறி என்னிடம் சிரித்தார். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. சார் நீங்கள் வேண்டுமென்றேதான் அதை நீங்கள் செய்தீர்கள். நீங்கள் தவறாக செய்யக்கூடிய ஆள் கிடையாது, எனக்கு தெரியும் என கூறினேன்.
அவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கும் நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை அவ்வளவு அன்பாக பாசமாக பார்த்துக் கொள்கிறார். இது எல்லாம் அவர் செய்ய வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆனாலும் தன்னுடன் நடிக்க நடிகர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையை நான் கற்றுக் கொண்டேன்" என்று சித்ரா ரெட்டி பேசியுள்ளார்.