துறவறம் பூண்ட பாய்ஸ் பட நடிகை - தினமும் 300 பேருக்கு உணவு
இறைபனிக்காக வாழ்நாளை அர்ப்பணிக்க உள்ளதாக நடிகை புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வரி
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை புவனேஸ்வரி. பல்வேறு படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சியான காட்சிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
மேலும் பல்வேறு சீரியல்களில் வில்லி பாத்திரத்திலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்த இவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் சட்டப்போராட்டம் நடத்தி நிரபராதி என நிரூபித்தார். மேலும் அரசியல் கட்சியில் மகளிர் அணியின் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
ஆன்மீக வாழ்க்கை
இந்நிலையில், சினிமாவில் இருந்து விலகி தற்போது ஆன்மீகம் பக்கம் திரும்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "குடும்ப சூழல் காரணமாக சென்னைக்கு வந்து நடிக்க தொடங்கிய எனக்கு கவர்ச்சி வேடங்கள் மட்டுமே கிடைத்து. வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென வழக்கில் சிக்கினேன். ஆனாலும் போராடி, நிரபராதி என நிரூபித்தேன். இருப்பினும் சமூகம் என்னை தவறாகவே பார்த்தது.
நான் கைது செய்யப்பட்டதை பெரிதாக காட்டிய ஊடகங்கள், நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்டதை சிறிய செய்தியாக வெளியிட்டன.5 வருடங்களாக ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன். என் வாழ்நாளை இறை பணிக்காக அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளேன்.
300 பேருக்கு உணவு
சிறு வயதில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட அனுபவம் உண்டு. இப்போது சென்னையில் சொந்தமாக உள்ள வீடுகள் உள்ளது. அதன் வாடகை வருவாயிலிருந்து எனது தேவை போக மீதி பணத்தை அன்னதானத்திற்கு செலவழிக்கிறேன். தினமும் 300 பேருக்கு உணவளிக்கிறேன். தீபாவளி பண்டிகைக்கு 10 ஆயிரம் பேருக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தேன்.
கோவில்கள், மசூதி, தேவாலயங்கள் என அனைத்துக்கும் செல்கிறேன். எந்த மதமும் என் ஆன்மீக பயணத்துக்கு தடையாக இருக்க கூடாது. மக்கள் என்னை எப்படி பார்த்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை" என தெரிவித்துள்ளார்.