முகத் தசைகள் செயலிழப்பு, தற்கொலை எண்ணம் - ஹாலிவுட்டிலிருந்து விலகும் ஏஞ்சலினா ஜோலி..?
முகத்தில் உள்ள தசைகள் செயலிழக்கும் பக்கவாதத்தால் தான் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து நடிகை ஏஞ்சலினா ஜோலி பேசியுள்ளார்.
ஏஞ்சலினா ஜோலி
ஹாலிவுட்டில் குழந்தையாக நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஏஞ்சலினா ஜோலி. தொடர்ந்து பல படங்களில் நடித்த இவரின் அழகும், நடிப்பும் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
நடிப்பை தாண்டி போர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆதரவாகக் குரல் எழுப்பி வருகிறார். மேலும், ஏஞ்சலினா ஜோலி கம்போடியா நாட்டைச் சேர்ந்த மேட்டாக்ஸ் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது 48 வயதாகும் ஏஞ்சலினா ஜோலி நடிகரும் தனது கணவருமான பிராட் பிட்டை 2016ம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஏஞ்சலினா ஜோலி "விவாகரத்துக்கு 6 மாதங்களுக்கு முன்பு `Bell’s palsy’ என்றழைக்கூடிய முகத்தில் உள்ள தசைகள் செயலிழக்கும் முக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டேன்.
பேட்டி
என் குழந்தைகளுடன் மட்டுமே நேரத்தைச் செலவிடுகிறேன். அவர்கள் எனக்கும் என் வாழ்க்கைக்கும் மிக நெருக்கமானவர்கள். வாழ்வதற்கும் தனியாகப் பயணம் செய்வதற்குமான எனது திறனில் விவாகரத்து தாக்கத்தை ஏற்படுத்தியது" என்றார்.
மேலும், விவாகரத்தைத் தொடர்ந்து அளவுக்கு அதிகமான ஊடக கவனத்தால் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இதன் காரணத்தினால் விரைவில் ஹாலிவுட், அதாவது லாஸ் ஏஞ்சல்ஸை விட்டு வெளியேற இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு அதிகப்படியான மன உளைச்சல், ரத்தக் கொதிப்பு ஏற்படுவதாகவும், ஆஸ்கர் வென்ற போது தனக்கு கிடைத்த புகழின் உச்ச நிலை தன்னை தற்கொலை செய்துகொள்ள தூண்டியதாகவும் ஏஞ்சலினா ஜோலி தெரிவித்துள்ளார்.