தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடிகர்கள் - விருதுகளை பெற்று சாதனை!
அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷும், சூப்பர் டீலக்ஸில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும் பெற்றுக்கொண்டனர். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடந்தது.
விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் விழாவில் மொழிவாரியாக விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழில் இருந்து சிறந்த நடிகராக தனுஷும், சிறந்த துணை நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த படமாக அசுரனும், சிறந்த இசையமைப்பாளராக இமானும், சிறந்த குழந்தை நட்சத்திரமாக கே.டி. என்ற கருப்புதுரையில் நடித்த நாகவிஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதேபோல், சிறப்பு ஜூரி விருதுக்கு பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நடிகர்களுக்கும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு விருதினை வழங்கி கௌரவித்தார்.