இந்தி தேசிய மொழியா? - பிரபல நடிகர்களின் சண்டையால் பரபரப்பு

Ajay Devgn Sudeep
By Petchi Avudaiappan Apr 27, 2022 09:11 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

இந்தி மொழி விவகாரத்தில் பிரபல நடிகர்கள் ட்விட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்தியா பல தரப்பட்ட மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள்,பழக்க வழக்கங்கள், உணவு,உடை என வேற்றுமையில் ஒற்றுமை என்ற பாணியில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால் சமீபகாலமாக இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க மத்திய அரசு முயன்று வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்து தனது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து பலரும் இந்தி திணிப்பை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கேஜிஎஃப் 2 வெற்றி குறித்து விழா ஒன்றில் பேசிய நடிகர் கிச்சா சுதீப் இனிமேலும், இந்தி மொழியை தேசிய மொழியென யாரும் சொல்ல வேண்டாம் எனக் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் உங்களை பொறுத்தவரையில் இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என கிச்சா சுதீப்பை டேக் செய்து கேட்டுள்ளார். மேலும், எப்போதும் இந்தி தான் நம் அனைவரின் தாய் மொழி என்றும் அது தான் தேசிய மொழி என்றும் இந்தியில் ட்வீட் செய்தார். 

இதற்கு பதிலளித்த சுதீப், நான் பேசியது, பொருள் வேறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன். நான் நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படிச் சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்கிச் சொல்கிறேன். புண்படுத்துவது போலவோ, தூண்டும்படியோ, விவாதத்துக்கோ நான் அதைச் சொல்லவில்லை. நான் ஏன் அப்படிச் செய்யபோகிறேன் சார் எனப் பதிலளித்திருந்தார். 

மேலும் நீங்கள் ஹிந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனென்றால் நாங்கள் மதித்து, நேசித்து ஹிந்தியை கற்றுக் கொண்டிருக்கிறோம். புண்படுத்துவது என் நோக்கம் இல்லை. ஆனால், இப்போது எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை என்னுடைய பதிலை நான் கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் அது உங்களால் எப்படிப் புரிந்து கொள்ளப்படும் என்று. நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?! என சுதீப் பதிவிட்டார்.

இதனை சுட்டிக்காட்டி பதிலளித்த அஜய் தேவ்கன், "நீங்கள் என் நண்பர். தவறாக நான் புரிந்துகொண்டதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நான் எப்போதும் நமது துறை ஒன்று என்றே கருதி வருகிறேன். நாம் எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம். அதே போல எல்லோரும் நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார். 

இந்தி மொழி விவகாரத்தில் பிரபல நடிகர்கள் ட்விட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.