ஆதரவற்றோர் இல்லம், ரத்த தான முகாம் என விஜய் சேதுபதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய இலங்கை ரசிகர்கள்
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி இலங்கையில் அவரது ரசிகர்கள் நலத்திட்ட பணிகள் செய்து சிறப்பு செய்திருக்கிறார்கள்.
நேற்று நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதனையடுத்து, நடிகர் விஜய்சேதுபதிக்கு, ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்துகளை குவித்து வந்தனர்.
நேற்று ஞாயிற்றுகிழமை தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை ரசிகர்களால் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இலங்கை விஜய் சேதுபதி நற்பணிமன்ற இயக்கத்தினர் அங்குள்ள சிறுவர் இல்லங்களில் கேக் வெட்டி மதிய உணவு வழங்கி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதோடு அல்லாமல் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஒவ்வொரு இடங்களிலும் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவதோடு, சிறப்பு இரத்ததான முகாம்களை அமைத்து பல ரசிகர்கள் உயிர்காக்கும் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில், ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்திருந்த அரவிந்தனும் சிறப்பு பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.