சினிமாவில் இனி நடிக்க போவதில்லை? - தீவிர அரசியலில் இறங்கும் நடிகர் விஜய்..!
ஆவலுடன் ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறது. அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் விஜய் வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் அவரின் மக்கள் இயக்கம் செயல்பாடுகள் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.
நடிகர் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அவரின் அறிவுறுத்தலின் படி அம்பேத்கர் பிறந்த நாளான்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்தார் நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.
சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். அப்போது ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் பேசியிருந்தார்.
சினிமாவில் இருந்து ஓய்வு
இதை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு முழுவதும் மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் கவனம் செலுத்த போவதில்லை எனவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லியோ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் வெங்கட்பிரபு உடனான தனது 68-வது படத்திற்கு பிறகு ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 மே மாதத்திற்குள் லியோ படத்தின் படப்பிடிப்பை முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், நடிப்பை சிறிது காலம் நிறுத்தி விட்டு களப்பணிகளில் விஜய் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.